ஞாயிறு, 8 டிசம்பர், 2024

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் - சிவகாசியில் இருந்து 5 கிமி

‌‌திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்



மூலவர்: நின்ற நாராயணப் பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்

தாயார்: செங்கமலத் தாயார் (கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்த நாயகி)

தீர்த்தம்: பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி

ஆகமம்: வைகானஸ ஆகமம்

விமானம்: சோம சந்திர விமானம்

தல வரலாறு: திருப்பாற்கடலில் திருமால் சயனித்திருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகியோர் இடையே தங்களில் யார் உயர்ந்தவர் என்ற பேச்சு எழுந்தது. அப்போது ஸ்ரீதேவியின் தோழிகள், “ஸ்ரீதேவி அதிர்ஷ்ட தேவதை. மகாலட்சுமி. அவள் பெயரை முன்வைத்தே பெருமாள் ஸ்ரீநிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் என்று அழைக்கப்படுகிறார். இவளையே பெருமாள் தன் மார்பில் தாங்குகிறார். தேவேந்திரன் இவளால் பலம் பெறுகிறார், வேதங்கள் ஸ்ரீதேவியை திருமகள் என்று போற்றுகின்றன” என்றனர்.

உடனே பூமாதேவியின் தோழிகள், “இந்த உலகுக்கு ஆதாரமாக விளங்கும் பூமாதேவி மிகவும் சாந்தமானவள். பொறுமையின் சிகரம். பொறுமைசாலிகளை வெல்வது கடினம். இவளைக் காப்பாற்றவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்” என்று கூறினர்.

நீளாதேவியின் தோழிகள், “நீளாதேவி தண்ணீர் தேவதையாக உள்ளாள். தண்ணீரை ‘நாரம்’ என்று கூறுவதுண்டு. இதனால்தான் பெருமாளுக்கு ‘நாராயணன்’ என்ற பெயர் வந்தது. தண்ணீரை பாலாக்கி, அதில் ஆதிசேஷனை மிதக்கச் செய்து தாங்குபவள் நீளாதேவி. அதனால் நீளாதேவியே உயர்ந்தவள்” என்றனர்.

இப்படியே பேச்சு நீண்டு கொண்டிருந்தது. தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, ஸ்ரீதேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு (திருத்தங்கல்) வந்து தவம் புரிந்தார். ஸ்ரீதேவியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இத்தலத்தில் அவளுக்கு காட்சி கொடுத்து, ஸ்ரீதேவியே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்டார். இதனால் இத்தலம் ‘திருத் தங்கல்’ என்று அழைக்கப்படுகிறார்



கோயில் அமைப்பும் சிறப்பும்: 

திருத்தங்கல் கோயில் 2 நிலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. மேல் நிலையில் மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுதை திருமேனி கொண்ட இவர் தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் ஆகிய திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். மூலஸ்தானத்தில் அருணன், மார்க்கண்டேயர், பிருகு உள்ளனர். அனுமன், சக்கரத்தாழ்வார் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.


இரண்டாவது நிலையில் கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்த நாயகி, அமிர்தநாயகி ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் செங்கமலத் தாயார் அருள்பாலிக்கிறார். தாயார் உயரமாகக் காட்சி அளிக்கிறார். தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும், பெருமாளுக்கு விசேஷ நாட்களில் தைலக் காப்பும் சாத்தப்படுகிறது.


சூரியனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இத்தலத்தில் கருடாழ்வார் நான்கு கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையில் இருக்க, பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி நாகத்துடன் நின்ற கோலத்தில் உள்ளார். தன் எதிரியான பாம்பை நண்பனாக ஏற்று தன் கையில் கருடாழ்வார் ஏந்தியிருப்பது இத்தலத்தில் மட்டுமே.






திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தில் 5-ம் நாள் மங்களாசாசனம், கருட சேவை, 9-ம் நாள் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். மேலும் எதிரிகள் கூட நண்பர்களாக மாறிவிடுவர் என்பது ஐதீகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக